இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, September 18th, 2019


இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை கையளித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் ராமேஸ்வரத்துக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்விரோதமாக இலங்கைக்கு திரும்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பின் அதிகாரிகள் ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதி முகாமில் நேற்று ஆய்வு செய்தனர். இதன்போது 45 குடும்பத்தைச் சேர்ந்த 146 பேர் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து ஐ.நா. சபை அதிகாரிகளிடம் விருப்பு மனு கையளித்துள்ளனர்.

குறித்த அகதி முகாமில் தற்போது 526 குடும்பங்களில் மொத்தம் 1,598 பேர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: