வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!

Tuesday, August 11th, 2020

அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாகம் பகுதியில் சுடலை ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதானதை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பலாலி பொலிஸ் பிரிவில் அண்மையில் வீதியால் சென்ற பெண்ணிடம் 2 தங்கப் பவுண் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவரால் அபகரிக்கப்பட்டது. அதுதொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற வீதியில் ஓர் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடன் கட்டுவனைச் சேர்ந்த ஒருவரை பலாலி பொலிஸ் நிலைய தலைமையிலான அணியினர் தேடிவந்தனர்.

அந்தச் சந்தேக நபர் மல்லாகம் சுடலை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் நேற்று  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் 2 தங்கப் பவுண் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அளவெட்டியைச் சேர்ந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்கள் கொள்ளையிடும் தங்க நகைகளை வாங்கி உருக்கி விற்பனை செய்யும் சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கொள்ளைச் சந்தேக நபர்கள் இருவரும் வளலாய், அச்சுவேலி மற்றும் கட்டுவன் ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்ற 5 வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: