விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் – பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் ஆரம்பம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா உர இருப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார்.

முதல் கட்டமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கே உரம் முதலில் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

பெரும் போகத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு உரங்களை கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த உர இருப்பு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பெரும் போக தேவைகளுக்கு உரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, ​​பெரும் போக நெல் விவசாயம் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்படி, விவசாயிகள் எவ்வித சந்தேகமும் இன்றி பெரும் போக பயிர்ச்செய்கைகளை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: