விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Thursday, January 5th, 2023

நடப்பு பெரும் போகத்தில் 800,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 500,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், அரசினால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் அதிகளவான நெல் விளைச்சலில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முறையான முறையில் நெல் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய பிரிவுகளின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தல் மூலம் உந்தப்பட்டு விவசாயிகளின் தேவைகளை புறக்கணித்து வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும், வேட்பாளர்கள் தேர்தலுக்காக 30-40 பில்லியன் ரூபா செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாவை நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியும்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என நிதியமைச்சின் அதிகாரியொருர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேர்தலை நடத்துவதை விட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் என்பது அரசாங்கத்தை கவிழ்க்கும் தேர்தல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளினால் தேர்தல் கோரப்படுகின்றதேயன்றி, மக்களால் அல்ல. வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: