விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை!

Saturday, December 11th, 2021

விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் 2022 வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாகவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

துபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேர் வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில்துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத்துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது. ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலக வங்கியின் பிரதி தலைவர் இலங்கைக்கு வருகை தந்து 500 மில்லியன் டொலரை வழங்கினார். அது வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மாத்திரமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: