விரைவில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடங்கிய நலன்புரி வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் உள்ளடங்கியதாக அந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி ,வீடமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட பேச்சு வார்த்தை ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

அமைச்சின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் அந்த சிக்கல்களை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த அரசாங்கம் எத்தகைய அபிவிருத்தியை ஆரம்பித்தாலும் அது மக்களுக்கு அவசியமானது என்றால் அதனை முன்னெடுத்துச் செல்வது அதனையடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசாங்கம் மாறுவதை போல் அபிவிருத்தித் திட்டங்களையும் மாற்றினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அத்தகைய திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவு செய்யாவிட்டால் அது நாட்டுக்கு பெரும் பொருளாதார ரீதியான நஷ்டத்தையே ஏற்படுத்தும்.

அரசாங்கம் சுற்று நிருபங்களை உருவாக்குவது வேலை செய்வதற்கு அன்றி வேலை செய்யாமல் இருப்பதற்காக  அல்ல. சுற்றுநிருபங்கள் என்ற போர்வையில் மக்கள் சேவையை தாமதப்படுத்த வேண்டாம். மக்கள் நிதி யிலேயே நாம் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெறுகின்றோம். அதனால் அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: