வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ பிரதமரிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளுக்கு இணங்க இலங்கை வங்கி கடன்களை வழங்குவதை உறுதிசெய்து, வங்கிகளின் கடன் கொள்கைகளை கண்காணிக்குமாறு மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் எதிர்காலத்தில் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசியைப் பதுக்கி வைப்பவர்கள் மீதான சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera), நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை தொழிலற்றோர் சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறித்த சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுமாயின், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார் 

அதேசமயம், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகளின் தொழிலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அகில இலங்கை தொழிலற்றோர் சங்கத்தினர் இதன்போது அமைச்சரிடம் யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: