விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை – மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்டு வாரப் பயிற்சி – துறைசார் அமைச்சர்கள் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021

வீதி ஒழுங்குகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்களிப்பில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 948 உயிர்களை இழந்துள்ளனர். அத்துடன் கடந்த 10 வருடங்களில் சுமார் 27 ஆயிரம் பேர் இறந்துள்ளகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தண்டப்பணம் செலுத்தும் முறையில் காணப்படும் குறைபாடுகளை தவிர்த்துக்கொள்ள உடனடியாக தண்டப்பணம் செலுத்தும் முறை மற்றும் சாரதி மதிப்பெண் முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும், இதற்கான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரதிகளின் ஒழுக்கமின்மை பிரதான காரணமென்றாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள் அமைச்சர் இந்நிலையை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றின் தேவை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கூறுகையில் – வீதி ஒழுங்குகள் தொடர்பில் சாரதிகளை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் நிலவும் கொவிட் சூழலில் அது தாமதமடைந்துள்ளது. அதற்கமைய அதன் முதற்படியாக மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு இரண்டு வார பயிற்சியை விரைவில் ஆரம்பிப்பதாகவும் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சரதிகள் சுமார் 17 ஆயிரம் பேர் சேவையாற்றுவதாகவும், அடிக்கடி இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பில் அவர்களின் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கைகளோ ஆர்ப்பாட்டங்களோ இன்றி மிகக் கடினமான நிலையில் பணியாற்றும் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

கடந்த கொவிட் நிலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 15 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டதுடன், 44 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பது தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதேவேளை குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்களில் அறிக்கையிடும் போது பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவது சிக்கலானது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: