வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய எஸ்ஐ சிறிகஜன் தலைமறைவு – சிஐடியினர் நீதிமன்றில் அறிக்கை!

Wednesday, July 19th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் சிறிகஜன் தலைமறைவாகிவிட்டார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் அறிக்கை முன்வைத்தனர்.

“அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு முயற்சிக்க முடியும். ஆகையால் அவர் நாட்டைவிட்டு வெளியேறத்தடை விதித்து கட்டுநாயக்க வானூர்தி நிலைய குடிவரவு, குடியகழ்வுப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நீதிவான் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் கொலையின் முக்கிய சூத்திரதாரி எனத் தெரிவித்து புங்குடுதீவைச் சேர்ந்த சுவிஸ்குமார் கைது செய்யப்பட்டார்.

எனினும் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சுவிஸ்குமாரை நீதிவான் மன்றில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்தமையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.சுவிஸ்குமாரிடம் பணம் பெற்றுத்தான் அவரை பொலிஸார் விடுவித்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டை விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கடந்த வாரம் கைது செய்தனர்.அவர் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றின் உத்தரவில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுவிஸ்குமாரை தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சிகளை எடுத்த போதும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று ஊர்காவற்றுறை நீதிவான் மன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

“வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சிக்கலாம். உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் சிறிகஜன் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலைய குடிவரவு, குடியகழ்வுப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நேற்று விண்ணப்பம் செய்தார். அதனை ஆராய்ந்த நீதிவான் தடை உத்தரவை வழங்க நீதிமன்றப் பதிவாளருக்கு கட்டளையிட்டார்.

Related posts: