வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Thursday, May 5th, 2016
மாணவி வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் புதனன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் புதனன்று தாக்கல் செய்திருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் தோன்றி சட்டமா அதிபரின் மனுவை விண்ணப்பமாகத் தாக்கல் செய்தார்.
புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார், கோபாலசிங்கம் ஜயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாந்தன், சிவதேவன் துஷாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜயதரன் கோகிலன், ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் இந்த 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் 11.05.2016ம் திகதி முடிவுறுகின்றது.
இந்த நிலையில் இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு,பிணைச்சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் இந்த மனு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுவதாக அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மன்றில் தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை 3 மாதத்திற்கு ஒரு தடவையாக ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரச சட்டவாதி தனது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் உத்தரவை முதலில் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கான விசாரணை நடத்துவதற்கு சந்தேக நபர்களை மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு உத்தரவிடுமாறும் அரச சட்டத்தரணி மன்றில் கோரினார்.
இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிப்பதா என்று விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 11ம் திகதி புதன்கிழமை அவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு அனுராதபுரம் மறியற்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளங்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அன்றைய தினம் நீதிமன்றத்தை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு உட்டபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற சுற்று வளாகப் பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு 15.05.2016ம் திகதி முடிவுறும் தறுவாயில், பிணைச்சட்டத்தின் 17வது உறுப்புரையின் கீழ் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது என்ற சட்டப் பரிந்துரையின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் யாழ் நீதிமன்றில் இந்த விசேட மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: