விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவிப்பு!

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.
விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இதுவரை தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பதிவு செய்யப்படவில்லை.
தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய முடியாத பட்சத்தில் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக நீண்டகாலம் செலவிட நேரிடும் எனவும் அவ்வாறாயின் சில பரிட்சை நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புதிய பதவிக்கான கடமைகளை நேற்று (02) ஆரம்பித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் தம்மை பதிவு செய்யப்படாததற்கு மதிப்பீட்டு கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லாததே காரணம் எனவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைகளுக்காக புதிய கட்டண முறையொன்று தயாரிக்கப்படும் எனவும் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது சுமார் பத்தாயிரம் பேரே பதிவு செய்துள்ளதாகவும் பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|