விடுவிக்கப்பட்ட பகுதி கிணறுகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு!

Friday, August 5th, 2016

அண்மையில் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீரை மக்கள் பருக முடியுமா? இல்லையா? என்பது தொடர்பிலும், கழிவு எண்ணெய் கலந்துள்ளதா? என்பது தொடர்பிலும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன், நேற்று (04) உத்தரவிட்டுள்ளார்.

கழிவு எண்ணெய் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

‘சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய கலந்துள்ளமை தொடர்பான அறிக்கையினை மன்றில் சமர்பிக்க வேண்டும்’ என நீதிமன்றம், கடந்த வழக்கு தவணையின் உத்தரவிட்டிருந்த நிலையிலும் அவ் அறிக்கையானது நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கவில்லை. இதன்போது மன்றில் முன்னிலையாகியிருந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி குறித்த பிரதேசத்தை அவசர நில பிரகடனம் செய்ய வேண்டும் எனவும் இதற்கான நிதி பற்றாக்குறையாகவுள்ள நிலையில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் வடமாகாண சபையிடம் கோரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிவான் இவை தொடர்பான கட்டளையானது எதிர்வரும் 12ஆம் திகதி வழங்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் அவற்றில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், தற்போது சுன்னாகம் பகுதிகளில் உள்ள 150 கிணறுகள் தொடர்பாகவும் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபைக்கும் நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: