விசேட அமைச்சரவை பத்திரம் விரைவில் முன்வைக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை, விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சர் ரமேஷ் பத்திரன குறித்த விடயத்தை உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களில், பலருக்கு 2002ஆம் ஆண்டு முதல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்படாமல் உள்ளன.

இவ்வாறு, நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என குறித்த சந்திப்பின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று, விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு, 10 பேர்சர்ஸ் காணி வழங்கல் மற்றும் தேயிலை மீள் பயிரிடல் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: