வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு முன் மாற்றுத்திறனாளி கோரிக்கை!

Wednesday, December 8th, 2021

தேர்தல்கள் இடம்பெறும்போது வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிப்பதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழு முன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கருத்தாய்வு நிகழ்விலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –  நாங்கள் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிக்கு ஏற்ற வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்தை சிரமத்துக்குளாக்க விரும்பவில்லை.

மாற்றுத்திறனாளிகள் தமது வாக்குகளை அளிப்பதற்காக பிரத்தியோகமான ஓரிரு நிலையங்களை எமக்கேற்ற வகையில் அமைத்து தந்தால் போதும். நாம் சுதந்திரமாக வாக்களிப்பில் ஈடுபடுவோம்.

மேலும் இலங்கையில் அச்சிடப்பட்ட நாணயத்தாள்களில் மாற்றுத்திறனாளிகள் விளங்கிக் கொள்ளும் வகையில் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளில் கற்பிக்கின்றார்கள்.

ஆனால் இலங்கையில் அச்சிடப்பட்டு தற்போது பாவனையில் உள்ள நாணயத்தாள்களில் மறைந்த உள்ள இலக்கங்களை தமது கைகளால் தடவி அறிந்து கொள்ள முடியாது உள்ளது.

மாற்றுத் திறனாளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்காமல் அவர்களையும் சமூகத்தில் ஒரு பிரஜையாக கருதி அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் தேர்தல் கடமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக உத்தியோகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை தேர்தல் கடமைகளில் ஈடுபட வேண்டும்.

ஆகவே தேர்தல் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் எம்மை அழைத்து எமது கருத்துக்களை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய அனைவருக்கும் நன்றி என அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது கருத்து தொடர்பில் பதிலளித்த யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் தாம் கரிசனையாக உள்ளதாகவும் அவர்களின் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: