வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை !

Thursday, September 26th, 2024

புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும் கொழும்பில் வேறு சில பகுதிகளிலும் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  

கொழும்பு மன்றக் கல்லூரிக்கு அருகிலும், காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும், பாலதக்ஷ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திலும் இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, வி8 ரக சொகுசு வாகனங்கள், ஜீப் ரக வாகனங்கள், ரேன்ஜ் ரோவர், மொன்டிரோ உள்ளிட்ட பல வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட 833 வாகனங்களில் 2022ஆம் ஆண்டளவில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வாகனங்களை உட்கொண்டு விட்டீர்களா? என இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.  ஜனாதிபதி செயலகத்தின் கீழ்க் காணப்பட்ட 259 வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.  அவ்வாறான வாகனங்களே பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts:


நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே ...
மாவட்ட மூலக்கிளை தெரிவுகளில் நீண்டகால அங்கத்தவர்கள் புறக்கணிப்பு - தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும...
கடற்படை வீரரின் மரணம் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம்...