வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி – அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம்!

Wednesday, August 16th, 2023

ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வியால் ரூ.78 மில்லியன் நஷ்டம். உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தேல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அண்மையில் தெரியவந்தது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடப்பட்டபோதே இந்த விடயம் தெரியவந்தது.

2008ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் குறித்த ரேடார் கட்டமைப்புக்காக 402 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், உலக வானிலையியல் அமைப்பினால் 323 மில்லியன் ரூபா மீண்டும் வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி குறித்த இயந்திரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததுடன், இது இயங்கும் நிலையில் இல்லையென்பதால் அதனை நாட்டுக்குக் கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்திருப்பதாகத் தெரியவந்தது.

இந்தக் கட்டமைப்பு பொருத்தப்படவிருந்த இடத்துக்கான வழியை சரிசெய்வதற்காக பல வருடங்கள் சென்றிருப்பதாகவும், இதனால் இந்த இயந்திரம் காலாவதியாகும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இதனைக் கொண்டு செல்வதற்கான பாரம் தூக்கி மற்றும் வீதி சரிந்து வீழ்ந்தமையால் சில உபகரணங்கள் சேதமடைந்திருப்பதாகவும், எஞ்சிய உபகரணங்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.

இதற்கமைய பாரிய நஷ்டம் ஏற்பட்டு முழுமையாகக் தோல்வியடைந்துள்ள இந்தத் திட்டத்துக்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பத்துடன் வளிமண்டலவியல் திணைக்களம் சரியான கேள்விப் பத்திரங்களைக் கோரி வினைத்திறனான வேலைத்திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

தற்பொழுது நிலவும் வரட்சி நிலைமை தொடர்பில் சரியான எதிர்வுகூறல்கள் மேற்கொள்ளப்படாமை மற்றும் அது தொடர்பான அறிக்கை குறித்தும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: