வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, January 1st, 2023

புதிய சிந்தனைகள் மற்றும் தீர்மானங்களுடன் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் புதிய வருடத்தில் கிட்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் –

“பாரிய சிரமங்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு முகங்கொடுத்து ஒரு வருடத்தை முடித்துக் கொண்டு புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கிறோம்.

நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பெரும் சுமையையும், நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை அடுத்து நம்மில் பெரும்பாலோருக்கு ஏற்பட்ட பின்னடைவையும் நான் நன்கு அறிவேன்.

ஆனால், நாம் ஏற்கனவே இந்த மோசமான காலங்களை கடந்துவிட்டோம், மேலும் 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கை பிரித்தானிய மகுடத்தின் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்து 2023 இல் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது.

ஆனால் பிரித்தானிய காலனியாக இருந்து சுதந்திரம் பெற்ற பிற நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை இன்னும் நம்மால் அடைய முடியவில்லை.

எனவே, நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதை புறக்கணிக்க முடியாது, அடுத்த தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தில் நாட்டிற்கு முதலிடம் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: