ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி – அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடி  குறித்து பொலிஸாருக்;கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மோசடி தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், குறித்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்திற்கான பயண செலவை வைப்பிலிட வேண்டும் எனவும் குறித்த மோசடியாளர்கள் கோருகின்றனர்.

இல்லாவிடின், குறித்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகைத்தரவேண்டும் என்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமார வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: