வலுவிழந்தது “நாடா”: வடக்கில் தொடர்கின்றது மழை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ‘நாடா’ சூறாவளி வலுவிழந்துள்ள போதும், வடக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கடும் மழை பெய்து வருவதுடன், கடற்பகுதி கடும் கொந்தளிப்பாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை காங்கேசன்துறையிலிருந்து 120 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்த நாடா சூறாவளி நள்ளிரவு யாழ் குடாநாட்டை அண்மித்த பகுதியூடாக தமிழ்நாட்டைக் கடக்கும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது. இதன் தாக்கம் காரணமாக இன்று (02) வடமாகாணத்தின் கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடும் காற்றும், அதிக மழைவீழ்ச்சியும் காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சூறாவளி தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வடக்கின் சகல மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்ததுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் என்றும் இல்லாதளவு குளிர் நிலவியது. யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வெப்பநிலை 23 பாகை செல்சியஸிலும் குறைவாகக் காணப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள ‘நாடா’ புயல் வலுவிழந்து வருவதுடன், இது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று அறிவித்திருந்தார்.கடற்கொந்தளிப்புக் காரணமாக வடமராட்சி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து படகுகள் காணாமல் போயுள்ளன.
சுப்பர் மடம் பகுதியில் இரண்டு படகுகளும், வியாபாரி மூலையில் ஒரு படகும், இன்பசிட்டியில் 2 படகுகளும் காணாமல் போயுள்ளன.யாழ் குடாநாட்டில் நேற்றுமுன்தினம் இரவு முதல் கடுமையான காற்றுடன் தொடர்ச்சியாக மழைபெயந்து வருகிறது. சாவகச்சேரி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது அவர் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
Related posts:
|
|