கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களில் வடக்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 16 பேர் தமது கடமையை ஏற்கவில்லை!

Tuesday, November 28th, 2017

கல்வியியற் கல்லூரிகளில் இருந்து இந்த ஆண்டு வெளியேறிய ஆசிரியர்களில் வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 207 ஆசிரியர்களில் 16 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய ஆசிரியர்களில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு 207 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதேநேரம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் பிற மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட நிலையில் பிற மாகாணத்தைச் சேர்ந்த சிலர் வடக்குக்கும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட பிற மாகாண ஆசிரியர்களை மீள அழைத்து வடக்கு மாகாண ஆசிரியர்களில் அதே எண்ணிக்கை ஆசிரியர்களை வழங்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடப்பட்டது.

இதன்போது மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு எவருக்கும் மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மடு கல்வி வலயத்துக்கு நியமிக்கப்பட்ட 34 ஆசிரியர்களில் 31 பேர் கடமையை பொறுப்பேற்ற நிலையில் 3 பேர் கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

மன்னார் கல்வி வலயத்துக்கு நியமிக்கப்பட்ட 23 ஆசிரியர்களில் 21 பேர் பொறுப்பேற்ற நிலையில் 2 பேர் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.

துணுக்காய் கல்வி வலயத்துக்கு நியமிக்கப்பட்ட 40 ஆசிரியர்களில் 37 பேர் பொறுப்பேற்ற நிலையில் 3 பேர் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. அதேபோன்று முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்களில் 22 பேர் கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் 4 பேர் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு நியமிக்கப்பட்ட 42 ஆசிரியர்களில் 38 பேர் பொறுப்பேற்ற நிலையில் 4 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. இதேநேரம் தீவகத்துக்கு 20 ஆசிரியர்களும், கிளிநொச்சிக்கு 7 ஆசிரியர்களும,; வலிகாமத்துக்கு 6 ஆசிரியர்களும், வவுனியா தெற்கு வலயத்துக்கு 9 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கடமைகளைப் பொறுப்பேற்கும் திகதியானது நவம்பர் மாதம் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: