வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!

Saturday, April 4th, 2020

கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் யாழ். மாவட்டத்தில் எதுவித வருமானமும் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணக் குடாநாட்டில் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் குடும்பங்கள் தற்போது வாழ்கின்றனர். இவர்களில் அரச ஊழியர்கள் குடும்பம் , ஓய்வூதியர்கள் குடும்பம் என சுமார் 36 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதனைவிட 76 ஆயிரம் குடும்பங்களிற்கான சமுர்த்தி விநியோகம் இடம்பெறுகின்றது.

இவற்றிற்கும் அப்பால் மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவாக ரூபா 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறும் 6 ஆயிரத்து 463 குடும்பங்களிற்கும் இந்த 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுவதோடு முதியோர் கொடுப்பனவு 19 ஆயிரத்து 910 குடும்பங்களிற்கு வழங்கப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில் மொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் குடும்பங்களுடன் தற்போது விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியங்களும் 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக இம்முறை 4 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டால் ஐரோப்பிய நாடுகள், கனடாவாழ் உறவுகள் தவிர்ந்த ஏனைய வறுமை மக்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டம் முழுமையாக வாழும் மக்களில் நாளாந்தம் கூலி வேலை செய்து வாழ்வாதாரம் நடத்தியவர்களிற்கும் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதற்கான விபரங்களும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்காகவும் குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் 16 ஆயிரத்து 514 குடும்பங்கள் வாழ்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவர்களிற்கான அனுமதியை உடன் எதிர்பார்க்கின்றோம் இதற்காக 8 கோடியே 25 லட்சத்து 70 ஆயிரம் ரூபா தேவை எனக் கோரப்பட்டுள்ளது. விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் நாளாந்தம் உழைத்து தமது குடும்ப பொருளாதாரத்தை ஈட்டிவந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அமைச்சரவையில் பத்திரம் ஒன்றை  கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்து சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா முற்கொடுப்பாக வழங்க அனுமதி பெற்றுக் கொடுத்து அது நடைமுறையில் இருந்துவரும் நிலையில் ஏனை வறிய மக்களது நிலைமைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் தெரியப்படுத்தி நிவாரணங்கள் வழங்க வேண்டும் என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரி...
இலங்கை - ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ...
ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!