வருட இறுதியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி ஆளுநர்

Monday, June 26th, 2017

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதகாலப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று தசம் எட்டு வீதமாக (3.8% ) காணப்படுகின்றது. இதன் காரணமாக இவ்வருட இறுதியில் ஐந்து சதவீத பொருளாதார வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாதாந்த நிதி மதிப்பீடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், மே மாதத்தில் இது இரண்டு தசம் ஐந்து சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் மூலமான வருமானம் அதிகரித்திருந்த போதிலும், கட்டார் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை காரணமாக இந்த வருமானத்தில் தாக்கம் ஏற்படக்கூடும்.மேலும் பணவீக்கம் ஆறு தசம் இரண்டு சதவீதத்திலிருந்து, ஐந்து தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதற்குக் காரணம் கொள்கை ரீதியிலான அபிவிருத்தியுடன் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்தும் அதே அளவில் முன்னெடுக்கப்பட்டமையே காரணம்.

வறட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அரசாங்கத்தின் தாராள பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளது. சேவை துறையில் மூன்று தசம் ஐந்து சதவீத பங்களிப்பு பொருளாதாரத்தில் இடம்பெற்றுள்ளது. கைத்தொழில் துறையின் வளர்ச்சி ஆறு தசம் மூன்று சதவீதமாகும். விவசாயத்துறையில் மூன்று தசம் இரண்டு சதவீத வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு திருப்திக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ஏற்றுமதி மூலமான வருமானம் 11 தசம் ஒன்பது சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 795 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செலவு ஒன்பது தசம் எட்டு சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு! - சம்பிரதாய முறைகளைவிட மருத்துவ ஆலோசனைகளுக...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல் !
'யாஸ்' சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்...