வருகிறது புதிய விசா நடைமுறை: அமைச்சர் ஜோன் அமரதுங்க!

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 48 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா கட்டணமின்றி நாட்டுக்கு வர சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
“சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் விடுவிக்கப்பட்ட போதிலும் விசா விண்ணப்பிக்கும் நடைமுறை இரத்து செய்யப்படவில்லை. அந்த நடவடிக்கை அதே முறையில் முன்னெடுக்கப்படும். விசா கட்டணம் விடுவிக்கப்பட்டமையினால் சுற்றுலா பயணிகள் அதிகமாக இலங்கைக்கு வருவார்கள்.
ஒஸ்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, சீனா, கம்போடியா, குரோஷியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிரீஸ், ஹங்கேரியா, இந்தியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து. இத்தாலி, ஜப்பான், லெட்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, ரூமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, ஸ்லோவெகியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, யுக்ரேன், செக் குடியரசு, மொல்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு விசா கட்டணமின்றி இலங்கை வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக மே மற்றும் ஜுன் மாதங்களில் 37,000 வரை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. எனினும் மிகச்சிறிய காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
இதன் காரணமாக இன்றுவரையில் 112,167 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். மேலும் 20000 பேர் போரா மாநாட்டின் பின்னர் வருகைத்தரவுள்ளனர். இந்த வருடம் முடிவடையும் போது 21 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|