நல்லூர் பிரதேசசபைக்கு எதிராக திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் போராட்டம்!

Saturday, February 9th, 2019

நல்லூர் பிரதேசசபையின் வரி அறவீடு உள்ளிட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் குறித்த போராட்டம் நடைபெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக வியாபாரி ஒருவர் நடந்து கொண்டமை தொடர்பில் வியாபார உரிமத்தை தற்காலிகமாக நல்லூர் பிரதேசசபை தடுத்துள்ளமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருநெல்வேலி சந்தை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்கள் மிகவும் சீரழிந்த நிலையில் காணப்படும் நிலையில் தங்களிடம் நாளாந்தம் அறவிடப்படும் நிதிகளைக் கொண்டு அவற்றைக் கூட சீரமைக்காது சாக்குப் போக்கு கூறி சுகாதார சீர்கேடுகளையும் பிரதேச சபை ஏற்படுத்தி வருகின்றதென வியாபாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பித்தக்கது.


Related posts: