வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் குற்றச்சாட்டு!

Monday, July 17th, 2023

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்டு  மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமான அவசியமான பணியாகவுள்ளது. சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில் அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும் நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம்.

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே எமது சின்னங்களை பாதுகாத்தால் தான் எதிர்காலச் சந்ததிகளுக்கு கடத்த முடியும்.

அண்மையில் காலிக் கோட்டையில் இருக்கும் அடையாளச் சின்னங்களை பார்வையிட்டேன் அங்கு நயினாதீவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கல்வெட்டொன்று காணப்பட்டது. அப்போது நான் நாம் அதை பாதுகாக்க தவறி விட்டோம் என எண்ணினேன்.

வீதியோரங்களில் காணப்படும் கட்டடங்கள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் போன்றன அபிவிருத்திகளின் போது அகற்றப்பட்டுவிட்டன. பல அகற்றப்படத் தயாராகவுள்ளன.

வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எமது வரலாறு எமது சந்ததிக்கு எந்தளவு பொறிக்கப்படுகின்றது என்பதும் தெரிவிக்கப்படடுள்ளது என்பதும் கவலையான விடயம்.

கல்விப் புலம் சார்ந்தவர்கள் எமது சந்ததிக்கு இதை அறிய உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரியங்களை செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கடந்த ஆறு மாத காலத்தில் அறிந்து கொண்டேன்.

எது எவ்வாறாயினும் இவ்வாறான மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில், வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலங்கள் பற்றி எமக்கிருக்கின்ற சான்றாதாரங்களாக இலக்கியங்களும் தோரண வாயில் போன்ற சான்றுகளும் இன்றும் எம் கண்முன்னே இருக்கின்றன.

யாழ்ப்பாண வைபவ மாலையில் ஆண்ட மன்னர்கள் கோயில்களை எவ்வாறு கட்டினார்கள் என்பதை ஆராய்வதற்கு உதவியாக உள்ளது.

கடைசி மன்னனான சங்கிலி மன்னன் வீழ்ந்த காலத்திலிருந்து நாம் இடப்பெயர்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மன்னன் என்று வீழ்ந்தானோ அன்றுமுதல் எங்கள் இனம் சுதந்திரமின்றி விடிவின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது.

மொழிக்காக இனத்திற்காக பண்பாட்டிற்காக பலர் தமது உயிரையும் வாழ்வையும் அர்ப்பணித்தனர். எனவே அடையாளச் சின்னங்களை நாம் காப்பாற்றவில்லையெனின் அது துர்ப்பாக்கிய நிலைக்குரியது.

எம் மத்தியில் பல வரலாற்று அடையாளச் சின்னங்கள் காணப்பட்டாலும் அதை அறியாமல் பலருள்ளனர். யமுனா ஏரிக்கு அண்மையிலே நல்லூர் ஆலய அத்திவாரம் காணப்பட்டது. ஆனாலும் இன்று அங்கு தேவாலயம் எழுந்து நிற்கின்றது.

35 ஆண்டுகளாக சேர்த்த தொன்மைப் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகங்களை அமைக்க அரசியல் தலைவர்கள் உட்பட பலரிடம் உதவி கோரிய போதும் யாரும் முன்வரவில்லை.

இறுதியில் பாரிய முயற்சியில் நாவற்குழியில் அரும்பொருட்காட்சியகம் அமைக்கப்பட்டது. அங்கு 23 தமிழ் மன்னர்களுக்கு சிலை வைத்து வரலாறுகளைப் பொறித்தோம்.

அதற்காக பல முறை யார் அந்த மன்னர்கள் எனவும் எங்கிருந்து நிதி பெறப்பட்டதென விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

மரபுரிமைச் சொத்து அரசியலுக்கானதல்ல இனத்திற்கானது. வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது.

எனவே வரலாற்று தொன்மைகளைப் பாதுகாக்க அனைத்து கல்விமான்களும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000]

Related posts: