வரலாற்றில் முதல் முறையாக இணையதளம் ஊடாக ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !

Sunday, February 21st, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்நிலையில், 23 ஆம் திகதி மாலை அல்லது 24ஆம் திகதி இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்து இணைய வழியூடாக உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன.  22 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன.

அதன்படி, 22ஆம் திகதி  நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் லீ  உரையாற்றவுள்ளதுடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் முதல்நாள் அமர்வில்  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.  மனித உரிமை ஆணைாயாளரின்  முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts: