வன்முறையை தூண்டும் நோக்கில் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தவில்லை – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, May 10th, 2022

அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டம் எனவும் வன்முறையை தூண்டும் நோக்கில் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை வன்முறை பலமிக்கவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் வன்முறையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை நோக்கி திருப்பபட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது ஊடகப் பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்றவர்கள் ஆதரவாளர்களை தூண்டு விடும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டம் முடிந்து வெளியில் வந்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் அங்கிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, எரித்தனர். இதன் பின்னர் காலிமுகத் திடல் நோக்கி சென்று கோட்டா கோ கமவில் உள்ள ஆதரவாளர்களை தாக்கியதுடன் கூடாரங்களையும் சேதப்படுத்தி தீயிட்டு எரித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மக்கள் ஆத்திரமடைந்து, நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக இல்லம் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் பலரது வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

அத்துடன் போராட்டகார்கள் தம் மீது தாக்குதல் நடத்த வந்திருந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி சிறைப்பிடித்தனர். அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பேருந்துகள் மற்றும் வாகனங்களை தாக்கியழித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாட்டில் நேற்று பெரும் பதற்றத்தையும் வன்முறையையும் ஏற்படுத்தியதுடன் நாட்டை கலவரபூமியாக மாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: