வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

யுத்தத்தின் பின்னர் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்குச் சொந்தமான காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 1985 அல்லது அதற்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட காணிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காடுகளாக அல்லது வனவிலங்கு திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்..

இரத்தினபுரி மாவட்ட வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

“எதிர்காலத்தில் இந்த காணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மீள வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

பலாங்கொடை ரஜவக காப்புக்காடு போன்ற பிரதேசங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான காணிகள் வனவளத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மறு ஆய்வுக்குப் பிறகு, எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு அந்தந்த பகுதிகள் உள்ளூர் மக்களுக்கு குறித்த காணிகள் திருப்பித் தரப்படும்.

அங்கீகரிக்கப்படாத கையகப்படுத்துதலைத் தடுக்கும் வகையில் எல்லைகள் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும்.

இந்தப் பகுதிகளைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டின் வனப் பரப்பை 32 வீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.” எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: