வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வருடார்ந்த தேர் உற்சவம்! 

Tuesday, March 22nd, 2016

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத வண்ணை வைத்தீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி பக்தர்கள் வடம்பிடிக்க இன்று(22) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில்(கி.பி-1790) இறுதியாகப் பதவி வகித்த தேசாதிபதியின் வளர்ப்பு மகனான வைத்தியலிங்கச் செட்டியாரால் அமைக்கப்பட் பெருமை வாய்ந்த ஆலயமாக இவ்வாலயம் விளங்குகிறது.

செட்டியாரின் குலகுரு கூழங்கைத் தம்பிரான் எனும் பெரும் புலவரே இவரை சிவப்பணியில் செலவிட வழிகாட்டினார்.

தென்னிந்தியாவிலே திருவாரூரிற்கு அருகில் புள்ளிருக்கு வேளுர் எனும் திருத்தலம் உண்டு.இதனை வைத்தீஸ்வரன் கோயில் என்றும் அழைப்பர்.இது தேவாரங்களிற் பாடப்பட்ட சிறப்பையுடையது.

வைத்தியலிங்கச் செட்டியாரின் குல முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் இக்கோயின் மீது மிகுந்த பக்தியுடையவர்கள்.

இப் பெயரே வண்ணார் பண்ணையிலுள்ள இச் சிவன் கோயிலுக்கும் இடப்பட்டது.இக் கோயிலை வண்ணார் பண்ணைச் சிவன் கோயில், செட்டியார் சிவன் கோயில் எனப் பலவாறு அழைக்கிறார்கள்.

ஈழ நாட்டில் எழுந்த பிற்காலச் சிவன் கோயில்களில் சிறந்ததாகக் கருதப்படும் இவ்வாலயம் ஐந்து பரிவாரத் திருக்கோயில்களை யாழ்ப்பாணத்தின் வெவ்வேறிடங்களில் கொண்டமைந்துள்ளது.

இந்தப் பரிவாரக் கோயில்கள் யாவும் நீண்ட வழக்காறு கொண்டவையாக விளங்குகின்றன.

வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இடம்பெறும் மகோற்சவங்கள்,விசேட உற்சவங்களின் போதெல்லாம் பரிவாரக் கோயில்களின் முக்கியத்துவம் பேணப்பட்டு வருகிறது.

சைவத்தின் காவலர் நாவலர் பெருமான் வண்ணை வைத்தீஸ்வரர் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தார்.இவரின் முதல் சைவப் பிரசங்கம் இவ்வாலயத்தில் இடம்பெற்ற போது தெய்வச் செயலாக ஆலய மணி ஒலித்தது.

இது நாவலரின் அரும்பெரும் சைவப் பணிகளுக்கு நல்ல சகுனமாய் அமைந்தது.

வரலாற்றுப் பெருமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வாலயத்தை வைத்தியலிங்கச் செட்டியாரின் வழித் தோன்றல்கள் தொடர்ந்தும் கால வரையறைக்குட்பட்டு கும்பாபிசேகங்களை நிகழ்த்திச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.

இக்கோயில் பஞ்சதள இராஜ கோபுரத்துடனும் பல வரலாற்றுப் பெருமைகளுடனும் யாழ்.மாநகரின் மத்தியில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது .

இம் மகோற்சவத்தின் அதி சிறப்பாக இரதோற்சவம் விளங்குகிறது.இவ் இரதோற்சவத்தில் கலந்து வடம் பிடிக்கும் அடியார்கள் தமது பிறவிப் பிணியை நீக்கி வாழ்வில் உயர்வு பெறக் கூடிய உன்னத நிலையை அடைவார்கள் என்ற ஐதீகமும் உண்டு.

9e3f1d7e-3bb0-4fcd-9079-334be4c86c6a

47ee9385-5faa-4323-ba50-208239e0eb50

Related posts: