வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!

Thursday, December 22nd, 2022

அரசாங்கத்திற்கு சொந்தமான வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க பல அரச வங்கிகள் நேற்று முன் தினம் (20.12.2022) நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.

அதன்படி வாடிக்கையாளரின் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்கள் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பிரதான அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கி நேற்றுமுன்தினம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்த வட்டி அதிகரிப்பானது டிசம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலையான வட்டி வீதத்தில் பெறப்படும் கடனுக்கும் இந்த வட்டி உயர்வு பொருந்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இரண்டு வருடங்களுக்கும் குறைவான நிலையான வட்டி வீதங்களின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் 3% அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பழைய கடன் வசதிகளுக்கான வட்டி விகிதங்கள் 15% ஆக இருக்கும் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: