18 வீத நிதியினையே வட மாகாண கல்வி அமைச்சு செலவு செய்திருக்கிறது –  கல்விச் சமூகம் விசனம்!

Wednesday, August 31st, 2016

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மூலம் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைச்சினால் கடந்த யூலை 31 ஆம் திகதி வரை 18 வீதமான நிதியினையே அமைச்சு செலவு செய்திருக்கின்றது என வட மாகாண நிதி செலவுக்கான முன்னேற்ற விபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை கல்விச் சமூகத்தல் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த செலவு விபர தகவல்கள் வடக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளியிடப்படடுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்;டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு

கல்வி அமைச்சுக்கு 2016 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுக்கான PSDG நிதியான 1000 மில்லியன் ரூபாக்களில் 177.23 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே யூலை 31 வரை செலவு செய்யப்பட்டுள்ளன இது கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி மொத்த நிதியில் 18 வீதமாகும். அவ்வாறே CBG நிதியில் கடந்த ஏழு மாதம் வரைக்கும் 34 வீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்றே கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ரிஎஸ்இபி நிதியில் 44 வீதமே செலவு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது 465 மில்லியன் TSEP நிதியில் கல்வி அமைச்சு கடந்த யூலை 31 வரைக்கும் 206.56 மில்லியன்களையே செலவு செய்திருக்கிறது. இதனை தவிர யுனிசெப் திட்டத்திற்கு ஊடாக 0.53 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதும் அதில் 0.03 மில்லியன் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது 6 வீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பல பாடசாலைகளில் மாணவர்கள் மரநிழ்களிலும் கூரை இல்லாத கட்டங்களிலும் மற்றும் போதிய வளங்கள் இன்றியும் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் கல்வி அமைச்சோ ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக உரிய காலத்தில் செலவு செய்யாது மந்த போக்கில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்ற நிலைமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கின் கல்விச் சமூகம் மிக அதிகளவான தேவைகளோடு இருக்கின்ற போது கிடைக்கின்ற நிதியை அந்த தேவைகளுக்கு அந்தந்த காலப்பகுதிகளில் செலவு செய்வதற்கு அமைச்சு வினைத்திறனற்று இருப்பது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்விச் சமூகம் இச் செயற்பாடுகளை விசனத்தோடு நோக்குகிறது.

வருடத்தின் ஏழு மாதத்தில் 18 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிகுதி 82 வீதமான நிதியை எஞ்சிய ஜந்து மாதங்களில் செலவு செய்ய வேண்டும் இந்தக் காலப்பகுதியில் மூன்று மாதங்கள் பருவ மழைக்காலம் எனவே வட மாகாண கல்வி அமைச்சு மிகுதி நிதியை எவ்வாறு செலவு செய்யப் போகிறது? அல்லது வழமை போன்று பெருமளவு நிதி இவ்வருடமும் திரும்பிச் செல்லப் போகிறதா எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts: