எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் – இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!

Sunday, March 21st, 2021

பதுளை – பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் 15பேரின் மரணத்திற்கு காரணமான விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாகன கட்டுப்பாடு, பேருந்து போக்குவரத்து சேவை, தொடருந்து பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நேற்றைய நாளில், விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள வீதியில், வீழ்ந்த நிலையில், நீண்ட காலமாக அகற்றப்படாமலிருக்கும் பாறையை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், குறித்த பாறையை அகற்றுவதற்கு, வீதியை அபிவிருத்தி செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், நீண்ட காலமாக குறித்த வீதியில், வீழ்ந்து கிடக்கின்ற பாறையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும், வரும் நாட்களில் இது குறித்து விசாரிக்க உள்ளதாக, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, ஏதாவது ஓரிடத்தில் வீதி ஒன்று சேதமடைந்து இருக்குமாயின், அந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறின்றேல், குறித்த வீதியை புனரமைக்கும் பணிகளை பொறுப்பேற்றுள்ள தரப்பினர், அந்த இடத்தில் அபாயம் உள்ளமைக்கான சமிக்ஞைகளை காட்சிப்படுத்த வேண்டும் என்பதுடன் அது குறித்தும், விசாரணை மேற்கொள்ள பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: