வடமராட்சியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Sunday, June 27th, 2021

யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும்  தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக பொறுப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று சந்தித்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: