வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் மூலதனத்தின் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கவுமே தேவைப்படுகின்றது. அதற்கு ஆரோக்கியமானதொரு முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

தனியார் கைத்தொழில் முயற்சிகளும் யுத்தத்திற்கு முந்திய காலங்களில் எமது பகுதிகளில் மிகவும் முன்னேற்றமான வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறிப்பாக, அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை, நீர்வேலி பூட்டுத் தொழிற்சாலை மற்றும் கண்ணாடித் தொழிற்சாலை, நாவற்குழி இறால் தொழிற்சாலை, அரியாலை ஆணித் தொழிற்சாலை, சவர்க்கார உற்பத்தித் தொழிற்சாலை, பெனியன் தொழிற்சாலை, பாதணித் தொழிற்சாலை, தும்புத் தொழிற்சாலை எனப் பல தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதே நேரம் கடந்த காலங்களில் நாம் இவ்வாறான பல தொழிற் துறைகளை மீளப் புனரமைத்து, அவற்றை ஊக்குவித்திருந்தோம்.அந்த வகையில், அல்லாரை தும்புத் தொழிற்சாலை, நீர்வேலி இரும்பு சார் உபகரணங்கள் உற்பத்தித் தொழிற்சாலை, வதிரி பாதணி தொழிற்சாலை, சங்கானை பற்றிக் தொழிற்சாலை போன்ற தொழில் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

அந்த வகையில், புதிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேலும் இனங்கண்டு, அவற்றை ஊக்குவிப்பதற்கும், நாம் ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ள தொழிற்துறைகளை மேலும் முன்னேற்றுவதற்கும் கௌரவ அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகின்றேன்.

அதே நேரம், கடந்த காலங்களில் அச்சுவேலி கைத் தொழிற்பேட்டையை நாம் மீளப் புனரமைத்து, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனையும் மேலும் முன்னேற்றத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வவுனியா கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்தி செய்து அதனையும் பலமிக்க ஒரு கைத் தொழிற் பேட்டையாக முன்னெடுக்குமாறும்,

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களிலும் புதிய கைத் தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறும் கௌரவ அமைச்சரை நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் மூலதனத்தின் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கவுமே தேவைப்படுகின்றது. அதற்கு ஆரோக்கியமானதொரு முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் உள்ளூர்ப் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளூர்  நிறுவனங்களினதும், மனித வளத்தினதும் பங்களிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியமும் தேவைப்படுகின்றது என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனினும், கடந்த கால யுத்தத்துடன் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியானது மனித, சொத்து மற்றும் வள இழப்புகளை அதிகமாகக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக வெளியுலகுடன் பாரியளவில் போட்டியிட்டு நிலைகொள்ளக் கூடிய வாய்ப்புகளை அதிகளவில் கொண்டிராத சூழலில், இப்பகுதி தொடர்பில் பொருளாதார ரீதியில் தன்னை ஓரளவுக்கேனும் நிலைப்படுத்திக் கொள்ள ஏதுவாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு விசேட நிதியீட்டுத் திட்டங்கள், வரி ஏற்பாடுகள், முதலீட்டு ஊக்குவிப்பு செயற்பாடுகள், மனித வள மேம்பாட்டிற்கான விஷேட ஏற்பாடுகள், போட்டித் தவிர்ப்பு நடைமுறைகள் போன்ற விஷேட எற்பாடுகளை  மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

01

Related posts: