வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் மும்முனைப் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண வலியுறுத்திக்  கவனயீர்ப்பு போராட்டம்: அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!

Tuesday, April 5th, 2016

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியும், திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான  நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பால் எதிர்வரும் சனிக்கிழமை(09) முற்பகல் -10.30 மணியளவில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஏனைய சமூகமட்ட அமைப்புக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீண்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற, புனர் நிர்மான அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65,000 பொருத்து வீடுகள் நமது பிரதேச காலநிலைக்கும், சமூக பண்பாட்டுச் சூழலுக்கும் முற்றிலும் பொருத்தமற்றனவாகும். மேலும் மக்களின் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் இப் பொருத்து வீடுகள் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்களும், துறைசார் நிபுணர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே, இத்தகைய இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி எமது காலநிலைக்கும், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர கல் வீடுகளை அமைத்து வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் அனல் மின்னுற்பத்திச் செயற்பாட்டை இன்று கைவிட்டு வருகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தத்தமது அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையிலே இயற்கை வளம் நிறைந்த திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில், மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
விவசாயம், மீன்பிடி மற்றும் கடல் வளம் நிறைந்த, நீலத் திமிங்கிலங்கள் வாளும் இக்கடற் பரப்பின் இயற்கைச் சமநிலையைக் கெடுப்பதாக அமைகின்ற இச் செயற்பாடானது, சம்பூர் பிரதேச மக்களின் வாழ்வைச் சிதைப்பதாகவும் அமைகின்றது. அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேற்கு பகுதிகளுக்கு மழையைத் தரும் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நுளைவாயிலான கிழக்கு இலங்கையின் சம்பூர் பிரதேசத்தில் காற்றில் கலந்துவிடப்படவுள்ள இம் மின்னுற்பத்தி நிலையத்தின் புகை, சாம்பல் கழிவுகள் எமது நாட்டின் வளிமண்டலத்தை நாசப்படுத்தி உயிர்வாழ்வைக் கேள்விக்குறியாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இவ் அனல் மின் நிலையத் திட்டத்தைக் கைவிட்டு சூரிய சக்தி அல்லது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் ஊடாக மின்சார தேவையையும், எதிர்கால மனித இருப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
நீண்ட காலமாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் சுன்னாகமும் அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள கிணறுகளில் கலந்துள்ள கழிவு எண்ணெய் மற்றும் ஆபத்தான பார உலோகங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்துகிறோம்  என்றுள்ளது.

Related posts: