சுதந்திரமான நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகத்தை நிறுவ திட்டம்!

Monday, May 8th, 2023

புதிய இரு உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரமான ‘நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம்’ நிறுவப்பட உள்ளது.

இந்த அலுவலகம், அரச நிறுவனங்கள் அல்லது ஊழியர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கும்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதீடு, நடுத்தர கால பொருளாதார மற்றும் நிதிக் கண்ணோட்ட ஆய்வுகள் ஆகியவற்றின் சுயாதீன பகுப்பாய்வுடன் நாடாளுமன்றத்தின் பொது நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக இந்த பிரத்தியேக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

இந்த அலுவலகம் அதன் சொந்த நிதியைப் பராமரிப்பதுடன் நன்கொடைகள், பரிசுகள், மானியங்கள் மற்றும் எந்த மூலத்திலிருந்தும் நிதிகளைப் பெறுவதற்கு அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு அதிகாரிகள் – நாடாளுமன்ற பாதீட்டு அதிகாரி மற்றும் துணை நாடாளுமன்ற பாதீட்டு அதிகாரி ஆகியோர் இந்த அலுவலகத்துக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பொதுச் செயலாளரால் பொது அறிவிப்பு வெளியிடப்படும்.

அத்துடன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு தனி அமைப்பாக அலுவலகத்தை நடத்துவதற்கு போதுமான அதிகாரங்கள் இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்.

இந்தநிலையில் பொது நிதிக்கான குழுவின் தலைவர்கள், துணை சபாநாயகர் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழு, இந்த இரண்டு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டில் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் பாதீடு, நிதிக் கொள்கை மற்றும் பேரண்ட பொருளாதார பகுப்பாய்வில் அறிவும், அனுபவமும் உள்ள எந்தவொருவரின் சேவைகளைப் பெறுவது அல்லது ஒப்பந்தத்தில் ஈடுபடுவது ஆகியவற்றுடன் பணியாளர்களை நியமிக்கவும், அதன் அதிகாரிகளை ஒழுங்குப்படுத்தவும், வேதனத்தை நிர்ணயம் செய்யவும் இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: