வடக்கு கிழக்கில் 4 ஆயிரத்து 750 வீடுகள் கட்டும் பணி ஆரம்பம்!

Monday, January 14th, 2019

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டங்களில் முதற் கட்டமாக 4 ஆயிரத்து 750 வீடுகள் அமைக்கும் பணிகள் தைப்பொங்கல் தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கான நிதி, மாவட்ட செயலகங்களுக்கு இடைக்கால ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேசியகொள்கைகள் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்குமாகாண அபிவிருத்தி, அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகள் பாரம்பரிய முறையிலான கல்வீடுகளாக அமைவதுடன், யுத்தத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும், அகதிகளாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயனாளிகள் தெரிவில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் போனவர்களை கொண்ட குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

குறித்த வீடுகள் 550 சதுர அடிபரப்பளவில் பயனாளிகளால் கட்டப்படுகின்ற வீடுகளாக அமைகின்றன.

இவற்றிக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இதற்கமைய ஒரு வீட்டிற்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1500 வீடுகளும், கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும், வவுனியாவில் 450 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் ஆரம்ப கட்டமாக அமைக்கப்படவுள்ளதாக வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Related posts: