வடக்கு, கிழக்கில் வழமை போல இயங்கும் பாடசாலைகள் – மாணவர் வருகையில் வீழ்ச்சி என கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் மாகாணங்களிலுள்ள பிரதான நகர பாடசாலைகள் நேற்று பூட்டப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளில் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அவ்வாறான பாடசாலைகளில் நேற்று எதிர்பார்த்த அளவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருக்கான போக்குவரத்து அசௌகரியங்கள் காணப்படாத குறைந்த எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
பாடசாலைகளுக்கு சமுகளிக்க முடியாத மாணவர்களுக்காக ஒன்லைன் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக முறையாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு சில பகுதிகளில் அத்தகைய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரிய – அதிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
முன்பதாக மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இந்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு வலய கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் குறித்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
எனினும் பல பகுதிகளில் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாமையால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|