இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் – இந்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் உறுதியளிப்பு!

Friday, November 4th, 2022

இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரியை புதுடில்லியிலுள்ள போக்குவரத்து அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் போக்குவரத்துத்துறை முன்னேற்றத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் இரு தினங்கள் தங்கியிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளினதும் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புடனும் இணைந்தும் செயற்படுவது தொடர்பில் பல்வேறு வகைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் ரயில்வேதுறை மற்றும் ரயில் பாதை கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக புனரமைப்பு செய்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம்செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் போக்குவரத்துத் துறையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய போக்குவரத்து அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்போது, எரிபொருள் மூலமான போக்குவரத்து செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம்தொடர்பில் இந்திய போக்குவரத்து அமைச்சர் கட்காரி இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

போக்குவரத்துக்காக மின்சார உபயோகம், எரிவாயு ஆகியவற்றை உபயோகிப்பது தொடர்பிலும் அந்த விடயத்தில் இந்தியா பெற்றுக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் இந்திய அமைச்சர் கட்கரி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்து வண்டிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இரு அமைச்சர்களுக்குமிடையிலான இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கவனம் செலுத்தப்பட்டு விடயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது இந்திய போக்குவரத்து அமைச்சர் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கனிம எரிபொருளில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தி மாற்று மின்சக்தி போக்குவரத்து தொடர்பில் தமக்குள்ள அனுபவங்களை விரிவாக பகிர்ந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: