வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!

Wednesday, February 13th, 2019

வடக்கில் 3 இடங்களில் வாகன வரிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன என்று மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன வரிப் பத்திரங்களைப் பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதைப்பெற்றுக்கொள்வதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அதை இலகுபடுத்தும் வகையில் தன்னியக்க இயந்திரம் மூலம் வாகன வரிப்பத்திரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ் கைதடியில் உள்ள பிரதி முதன்மைச் செயலர் அலுவலகத்தில் பரீட்சார்த்தமாக ஏசியன் பவுண்டேசனின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாகனக் காப்புறுதி மற்றும் புகைச் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இயந்திரத்தில் கடனட்டையைச் செலுத்தி அதிலுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 14 நாள்களுக்கான தற்காலிக வாகன வரிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வாகன வரிப் பத்திரத்துக்கான முதன்மைப் பிரதி வாகனம் பதியப்பட்ட புத்தகத்தின் முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பப்படும். பரீட்சார்த்தமாகத் தற்போது நடைபெற்றுவரும் இந்தச் சேவையில் ஏற்படும் சவால்கள் ஆராயப்பட்டு அவை தீர்க்கப்பட்டு இந்தச் சேவையை மக்களுக்கு இலகுவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்பின்னர் வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட 3 இடங்களில் இந்தத் தன்னியக்க இயந்திரங்கள் பொருத்தப்படும். இந்த இயந்திரத்தில் 24 மணி நேரமும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: