வடக்கில் பிறப்பு வீதம் அதிகரிப்பு – சுகாதாரத் திணைக்களம் தகவல்!

வட மாகாணத்தில் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகரிப்பு வடக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும் 2017 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 796 குழந்தைகளும் பிறந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 833 குழந்தைகளும் 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 839 குழந்தைகளும் பிறந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 498 குழந்தைகளும் 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 516 குழந்தைகளும் பிறந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 576 குழந்தைகளும் 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 880 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இவ்வாறாக வடக்கு மாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 371 குழந்தைகளும் 2017 ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 182 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இதன் பிரகாரம் 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாகப் பிறந்துள்ளன என்றுள்ளது.
Related posts:
|
|