வடக்கில் உவர்நீராக மாறும் குடிநீர் – மழை நீரை சேமிக்க அரசு திட்டம்!

Friday, March 22nd, 2019

வடமாகாணத்தில் குடிநீர் உவர் நீராக மாறிவரும் நிலையில் மழைநீரை சேமித்து மக்களுக்கு குடிநீராக வழங்குவதற்காக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ. மோகன் ராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடமேல் பருவப்பெயர்ச்சி காற்று, தென்மேற் பருவப்பெயர்ச்சி காற்று என இரண்டு பருவப்பெயர்ச்சிகள் இருக்கின்றன.  தென் மேல் பருவப்பெயர்ச்சியின் மூலமே எமக்கு அதிக நீர் கிடைக்கப்பபெறுகின்றது. நாட்டில் 2/3  வறட்சியான பிரதேசம் என்பதால் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கண்காணிப்பு குறித்த பகுதிக்கே அதிகமாக இருந்தது.

இந்த வறட்சியான பிரதேசங்களுக்கு வடமேல் பருவப்பெயர்ச்சிக்காற்றின் மூலமே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அது போதுமானதாக இருக்காது தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்றின் மூலம் கிடைக்கும் மழை வீழ்ச்சியை விட குறைவாகும். அதனால் மழை நீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றோம். நூற்றுக்கு 90 வீதம் குளங்களில் இருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு பெய்யும் மழையை அந்த ஒரு வருடத்தில் ஏற்படும் வறட்சிக்குத்தாக்குப்பிடிக்கும் அளவிற்கே குளங்கள் அமைக்கப்பட்டது. தற்போது 3,4 வருடங்கள் நீர் இல்லாத நிலை ஏற்படுகின்றது. ஆகவே நீர்ப்பாசனத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் பட்சத்தில் 3,4 வருடங்களுக்கு வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.

வடக்கில் குடிநீர் இன்று உவர்நீராக மாறிவருகின்ற நிலை ஏற்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்துவதற்கு மாற்றுவழியினை ஏற்படுத்துவதற்கும் தற்போது ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் பெய்யும் மழை கொண்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான குளத்தை அமைத்து குடிநீரை வழங்குவதற்கு திட்டமிட்டு வருகின்றோம்.

எதிர்வரும் சந்ததியினருக்கு நீரை சேமிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது. அதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்பதுடன் நீர் நிலைகளையும் நாம் சுத்தமாக பேணிப்பாதுகாக்க வேண்டும். எமக்கு போதுமான நீர்வளம் கிடைக்கின்றது. ஆனால் நாம் இயற்கையை அழித்துக்கொண்டு நீர்த்தட்டுப்பாடுகளை நாமே ஏற்படுத்திக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் நீர் நிலைகளில் கொட்டுவதனால் எமக்கு நீர்த்தட்டுப்பாடுகள் ஏற்படும்.

மக்களே சிக்கனத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆரம்பத்தில் ஆறுகளின் நீரை குடிநீருக்கு பயன்படுத்தினர். இன்று அவ்வாறான நிலைமை இல்லை. அதற்கு காரணமும் நாம் ஆகிவிட்டோம். இந்த தினத்திலிருந்தாவது நீரை சிக்கனமாக பயன்படுத்தி சகலருக்கும் நீர் என்ற எண்ணத்தை மனதினில் நிலைநாட்டி கொண்டு செயற்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: