வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோரும்!

Monday, November 22nd, 2021

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பமாவதையடுத்து வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் 8 ஆம் திகதிமுதல் தரம் 11 இருந்து 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றுமுதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்   முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 63 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் 5 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 54 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் 7 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதுமாக மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுமே இவ்வாறு இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை இன்றையதினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநெச்சி மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமுகமளித்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிலையில் பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியமையானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: