வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் – அம்பாறை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!
Saturday, September 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தமது பிரதேசத்தில் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள் அதிகரித்து வருவதை கட்டுக்கடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் நேற்று மாலை அட்டாளைச்சேனை கடற்கரையில் படகுகளில் ஏறி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதன்போது மீனவ சங்கங்களின் சார்பில் கருத்து தெரிவித்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள்,
தங்களுக்கும் தங்களுக்கு நல்லது செய்யும் மீன்பிடி பரிசோதகர் எஸ். பாபுவுக்கும் தொடர்ந்தும் மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரினால் அநீதிகள் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்கள்.
மேலும் சட்டவிரோதமான சுறுக்குவலை பாவனை பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. அவ்வாறு சட்டவிரோத செயலை செய்பவர்களுக்கு உதவும் விதமாக மீன்பிடித்திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளர் செயற்பட்டு வருகிறார்.
சட்டநடவடிக்கைகளின் போதும் அதிகாரதுஷ்ப்பிரயோகம் செய்கிறார். உதவிப்பணிப்பாளர் கூறும் விடயங்களை ஏற்றுக்கொள்ளாமல் மீனவர்களின் பக்கம் நின்று எவ்வித கையூட்டல்களுக்கும் சோரம் போகாத அதிகாரி எஸ். பாபுவை இடமாற்றம் செய்துள்ளார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவரது இடமாற்றத்தை இரத்துசெய்து அறிவிக்க மீன்பிடி அமைச்சர் உடனடியாக முன்வர வேண்டும். வடக்குக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலங்களில் கிழக்கிற்கும் நிறைவான சேவையை முன்கொண்டு செல்லவேண்டும்.
இது விடயம் தொடர்பில் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிமிடம் பேசியுள்ளோம். எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


