வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு   பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: – வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்!

Saturday, March 12th, 2016

பெண்கள் விவகாரப் பிரிவு என்பது எங்களுடைய அமைச்சுக்குக் கீழ்  வருகின்ற ஒரு பிரிவாக இருந்தாலும் பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் காணப்படுகின்றது. தற்போது ஒரு  உத்தியோகத்தர் கூட இல்லாமல்  இருக்கும் இந்த திணைக்களத்தை இயக்குவதற்கான முயற்சிகளையும் நாம் எடுத்து வருகிறோம். ஆனால் இதற்கான மத்திய அரசின் அமைச்சில் எமது பகுதிக்குரிய அமைச்சரொருவர் பிரதிநிதித்துவம் செய்துவருகின்ற போதும் இதற்குரிய சரியான பதில் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. என வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் சர்வதேச மகளிர் தின விழா நேற்று முன்தினம்  புதன்கிழமை(09-03-2016) பிற்பகல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் –

உலக நாடுகளிலே பெண்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகளுக்கும் அப்பால் இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் பேசும் பெண்கள் அதிகளவு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நாட்டிலே 30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக எங்களுடைய சமூகம் பெருமளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தாலும் இதன் காரணமாகக் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களாக, தற்போதும் எதிர்கொண்டு வாழ்பவர்களாக எங்களுடைய பெண்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சமூகத்திலேயுள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களாக எங்களுடைய போராட்ட காலத்திலே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். எமது தமிழ்ப்  பெண்கள் ஆண்களுக்கு எவ் வகையிலும் குறைந்தவர்களல்ல என்பதை கடந்த போராட்ட காலப் பகுதிகளில் இந்த உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, எங்கள் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான காரணங்களை நாங்கள் ஆராய வேண்டியிருக்கிறது.

எமது சமூகம் 1960 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் தற்போது இன்னும் பல வருடங்கள் பின்னோக்கிய ஒரு சமூகமாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சிறு விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related posts: