வடக்கின் பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

Wednesday, July 6th, 2016

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இது தொடர்பில் வடமாகாண பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

‘பட்டதாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைவாய்ப்பை கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பட்டதாரிகளுக்கு இன்னமும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அண்மைக்காலங்களில் பட்டதாரிகள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்களை மத்திய மற்றும் மாகாண அரசுகள் விடுத்துள்ளன.

இது பட்டதாரிகளுக்கு மகிழச்சி தரும் விடயமாக காணப்படுகின்றது. எனினும், மிக விரைவாகவும், நீதியான முறையிலும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு, பட்டதாரிகளின் நிலை இவ்வாறு கேள்விக்குறியாகக் காணப்படுகின்ற நிலையில், க.பொ.த உயர்தரத் தகைமையுடன் நாடளாவிய ரீதியில் 23 ஆயிரம் பேர் அரச ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தொண்டர் ஆசிரியர், ஆசிரிய உதவியாளர் என்ற அடிப்படையிலும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிகின்றோம். இதில் வடமாகாணத்தில் தொண்டர் ஆசரியர்களின் எண்ணிக்கையானது செல்வாக்குகளின் அடிப்படையில் பன்மடங்கு அதிகரித்துள்ளமையை அறிய முடிகின்றது. இவ்வாறு பொருத்தமற்றவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதால் கல்விமட்டம் வீழ்ச்சியடைவதோடு தகுதியான பட்டதாரிகள் பாதிப்படைகின்ற நிலைமை காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை கண்டித்து, பட்டதாரிகளுக்கு உரிய நியமனங்களை வழங்கக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30க்கு யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: