வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதன் கேள்வி!

Tuesday, January 31st, 2017

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே மூன்று மாதங்கள் வழங்கப்பட்டிருந்தும் எதுவித தீர்வுகளும் வெளிக்கொணரப்படாத நிலையில் மீண்டும் ஏன்  இரண்டு மாதங்கள் கோரப்படுகின்றன. குறித்த விசாரணைக் குழுவை விசாரிப்பதற்கும் ஒரு குழு வடமாகாண சபை நியமிக்க போகின்றதா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 83ஆம் அமர்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவின் கால எல்லையை மேலும் 2 மாதங்கள் அதிகரிக்கும்படி கேட்டிருந்தார். இதனையடுத்து 2 மாதகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையிலேயே வை. தவனாதன் கால நீடிப்பு எதற்காக வழங்கப்படுகிறது  என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால் கால அவகாசத்தை கேட்டால் அதனை நாம் வழங்க வேண்டும். இல்லையேல் கால அவகாசம் போதாமையினால் சில விடயங்களை ஆராயாமல் விடும் சந்தர்ப்பங்கள் உண்டு எனவே கால அவகாசத்தை வழங்கவேண்டும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

thavanathan Epdp

Related posts: