ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அமைச்சர் அலி சப்ரி பேச்சு!

Saturday, November 26th, 2022

ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக மொஸ்கோவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் இலங்கை நீண்டகாலமாக நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நியதிகள் அல்லது சட்டங்களை மீறாமல் இலங்கை ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய-உக்ரேனிய மோதலால் நாங்கள் அசாதாரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்த அமைச்சர், பெட்ரோல், நிலக்கரி, தானிய விலைகள் மற்றும் உரங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இராஜதந்திர ரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் இதனை விரைவாக தீர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் இராணுவ மோதல்கள் பல தசாப்தங்களில் மிக மோசமான பரிமாற்ற நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இங்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், “இலங்கையில் சுமார் 33% பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.  அவர்கள் அந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு எரிபொருள் அத்தியாவசியமான காரணியாகும். இது எமது மக்களின் வாழ்வாதாரம் போன்றது.

எமது ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருளின் விலையும் நான்கைந்து மடங்காக அதிகரித்துள்ளது. பெரும்பாலான இலங்கையர்கள் அந்த விலையை தாங்க வேண்டியுள்ளது. அது கடினம்.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டும் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நாடுகளாகும். உண்மையில், கடந்த காலங்களில், நம் நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் பத்து நாடுகளில் அவர்கள் முன்னணியில் இருந்தனர்.

இந்த மோதல் சூழ்நிலை காரணமாக அவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இது நமது பொருளாதாரத்தையும் இன்னொரு பக்கம் பாதிக்கிறது.

இந்த அனைத்து உண்மைகளையும் உன்னிப்பாகக் கவனித்த பிறகு, சலுகை விலையில் எரிபொருளைப் பெறுவதற்கான வழிமுறையில் கவனம் செலுத்தினோம். உண்மையில், எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், நாங்கள் நிச்சயமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

ஏனென்றால், இந்த விலைவாசி உயர்வை இந்த நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எங்கள் ஜனாதிபதி சொன்னதுபோல், யானைகள் சண்டையிடும் போது புல் பாதிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: