ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன – அடுத்த 12 வருடங்களில் இலங்கை ஆசியாவில் பலமான நாடாக விளங்கும் -நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. நாட்டை ஆளும் அதிகாரத்தை ரணிலுக்கு மக்கள் வழங்கும் பட்சத்தில் அடுத்த 12 வருடங்களில் இலங்கை ஆசியாவில் பலமான நாடாக விளங்கும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் அதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை 35 ஆண்டுகளாக வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. அந்த சக்திகளை தோற்கடித்து அடுத்த 12 வருடங்களுக்கு ஆளும் அதிகாரத்தை நாட்டு மக்கள் அவருக்கு வழங்கினால் இலங்கை ஆசியாவில் பலமான நாடாகும்.

இலங்கையை பலவீனமான ஒருவர்தான் ஆள வேண்டும் என்பதே வெளிநாட்டு சக்திகளின் நோக்கம்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை தாம் தடுத்ததாக கிராம மக்கள் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. வெளிநாட்டு சக்திகளே தடுத்தன.

எனவே, அடுத்த 12 வருடங்களுக்கு ஆட்சி செய்வதற்குரிய அனுமதியை நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கினால், இலங்கை ஆசியாவில் பலமான நாடாக விளங்கும். அவ்வாறு இல்லையேல் கடும் சவால்கள் ஏற்படும். இதுவே உண்மை.

முன்பதாக வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீட்டார். எனவே, தேசிய வேலைத்திட்டத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 இதனிடையே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிரல் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளினதும் தேவை. ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. இது நாட்டுக்கு இலகுவான பயணமல்ல. இதுவொரு இருண்ட பயணம்.

தற்போது நாட்டில் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னோக்கிச் செல்வதையே நாம் எதிர்நோக்க வேண்டும்.

2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: