ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை – பிரதமர் !

Tuesday, January 21st, 2020

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவுகளும் இதில் உள்ளடங்கியிருப்பதால் விசாரணையின் பின்னரே ஒரு முடிவை எடுக்க முடியும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து செயற்படுகின்ற சிங்கள பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றையதினம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதோடு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, “தற்போது குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிக்கு தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட நபரை தூக்கு மேடைக்கு ஏற்றுமாறு கூறுவார்களாயின் உத்தரவிட்டவரையும், அப்படி சொன்னவரையுமே முதலில் தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு செய்வதுவும் இன்னுமொரு கொலை செய்வதற்கு சமமாகும். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நீதித்துறை மீது கைவைத்திருக்கின்றனர்.

இது மிகவும் பாரதூரமானது. விசாரணையொன்று நடக்கிறது. அதன் பிரதிபலனையே பார்க்கமுடியும். இன்னும் எத்தனை நீதிபதிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், 10 பொலிஸ் குழுக்கள் இதுகுறித்த விசாரணைகளை நடத்தி வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: